தமிழகத்தில் உண்மையான கல்வி செய்திகளை வழங்கி வரும் பிரபல யூடியூபர் ஆன அஸ்வின் (Ashwin) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் அவர்களுக்கு 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பாடத்திட்டங்களை குறைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட கோரிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
1. பொதுவாக, ஒவ்வொரு கல்வியாண்டிலும் முழு பாடத்திட்டத்தை (அனைத்து அலகுகளும்) கொண்டு மூன்று திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டிலோ, 10,12ம் வகுப்புகளுக்கு தலா இரண்டு திருப்புதல் தேர்வுகளும், 11ம் வகுப்புக்கு ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடத்தப்படுகின்றன. அதுவும், அனைத்து அலகுகளும் கொண்டு தேர்வு நடத்தப்படவில்லை. உதாரணமாக, 12ம் வகுப்பு கணித பாடத்தில் மொத்தம் 12 அலகுகள் உள்ளன. முதல் திருப்புதல் தேர்வில் அலகு 1-4ம், இரண்டாம் திருப்புதல் தேர்வில் அலகு 5-8ம் மட்டுமே தேர்வுக்கான பாடப்பகுதிகளாக இருக்கின்றன. மீதமுள்ள அலகுகளான 9-12இல் மாணவர்களுக்கு தேர்வு நடத்த திட்டமிடவில்லை. இதுபோல, ஒவ்வொரு பாடத்திலும் ஒரு சில அலகுகள் திருப்புதல் தேர்வுகளில் சேர்க்கப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்றால், இன்னும் சில பள்ளிகளில் பாதி பாடத்திட்டத்தையே முடிக்கவில்லை. அதனால் தான், ஒரு சில அலகுகளை விட்டுவிட்டு இந்த திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பின்னர் எவ்வாறு அனைத்து அலகுகளையும் மாணவர்கள் படித்து பொதுத்தேர்வு எழுத இயலும்? எனவே, திருப்புதல் தேர்வுகளில் கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய அலகுகளை மட்டுமே பாடப்பகுதிகளாக கொண்டு இந்தாண்டு 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும்.
2. இந்த ஆண்டு 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடிய மாணவர்கள் அனைவரும் முதல் முறையாக பொதுத்தேர்வை எழுத உள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கற்றல் குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. பல மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டு பொதுத்தேர்வு வினாத்தாளில் எளிமையாக கேள்விகள் கேட்கப்பட வேண்டும். புத்தக அக வினாக்கள் கேட்பதை முடிந்தளவு தவிர்த்து விட்டு, புத்தக புற வினாக்களில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.
3. சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, பள்ளிகள் சில நாட்கள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக, கற்றல் குறைபாடு ஏற்பட்டிருந்தது. மாணவர்கள் பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று விடும் அபாயம் இருந்தது. எனவே, அந்த ஆண்டிற்கு பிரத்யேகமாக சிறப்பு கையேடு ஒன்று துறையால் அப்போது வெளியிடப்பட்டிருந்தது. இதனால், மாணவர்கள் தேர்வுகளை சிறப்பாக அப்போது எதிர்கொண்டனர். அதேபோல, இந்த ஆண்டும் கற்றல் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தாண்டு பொதுதேர்வுக்கென பிரத்யேகமாக சிறப்பு கையேடு. MINIMUM MATERIAL, PTA QUESTION BANK, CEO MATERIAL போன்றவற்றை வெளியிட்டு. மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வழிவகை செய்ய வேண்டும்.
4. 11,12ம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு பாடத்திலும் அகமதிப்பீடு 10 மதிப்பெண்கள் உள்ளது. மாணவரின் வருகைப் பதிவு, உள்நிலை தேர்வுகள், ஒப்படைப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்தாண்டு மாணவர்களின் வருகைப் பதிவு கட்டாயம் இல்லை என்று அரசும் நீதிமன்றமும் அறிவித்தன. அதேபோல முதல் திருப்புதல் தேர்வு நேர்மையான முறையில் நடைபெறவில்லை. வினாத்தாள் கசிந்ததால், சில லட்ச மாணவர்கள் நேர்மையற்ற முறையில் முழு மதிப்பெண் பெற்றனர். சிலர் நேர்மையாக தேர்வெழுதி குறைவாக மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த மதிப்பெண்கள் வைத்து அகமதிப்பெண் கணக்கிட்டால் நியாயமாக இருக்காது. அதுமட்டுமில்லாமல், மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். எனவே, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், இந்தாண்டு 11,12ம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு பாடத்திலும் முழு அகமதிப்பீடு மதிப்பெண்ணான 10/10 மதிப்பெண்ணை வழங்க வேண்டும்.
5. சில தினங்களுக்கு முன்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி 10ம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கும், 12ம் வகுப்பு வேதியியல், கணக்குப்பதிவியல் புவியியல் தேர்வுக்கும், மாணவர்கள் தங்களை தேர்வுக்கு தயார் செய்து கொள்ள ஒரே ஒரு நாள் மட்டும் உள்ளது. இதனால், தேர்வுக்கு முன்பு மாணவர்கள் படிக்க போதுமான நேரம் இல்லை தொடர்ந்து தேர்வுகள் நடைபெற்றால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். எனவே, 26/05/2022 அன்று நடைபெறவிருக்கும் 10ம் வகுப்பு அறிவியில் தேர்வையும், 13/05/2022 அன்று நடைபெறவிருக்கும் 12ம் வகுப்பு வேதியியல், புவியியல் கணக்குப்பதிவியல், தேர்வுகளையும் வேறு தேதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். தேர்வுக்காக குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது மாணவர்கள் தயார் செய்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
0 Comments