தமிழகத்தில் தொடர்ந்து கசிந்து வரும் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் !!!
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு முன்னர் அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வுகள் வழக்கமாக நடைபெறும் ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு அரையாண்டு தேர்வு காலாண்டு தேர்வு நடத்த முடியவில்லை இதன் காரணமாக தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு தேர்வுத் துறையின் சார்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டமாக அதாவது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை பாட திட்டம் போன்ற அனைத்தையும் பள்ளிக்கல்வித்துறை இரண்டு மாதங்களுக்கு முன்னரே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 9ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த திருப்புதல் தேர்விற்கான வினாத்தாள்கள் அனைத்தும் தேர்வுகள் துறையால் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த வினாத்தாள்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தங்களுடைய மாவட்டத்திலுள்ள அச்சகங்களில் கொடுத்து வினாத்தாள்களை அச்சடித்து கொள்கிறார்கள். இருப்பினும் தமிழகம் முழுவதும் அனைவருக்கும் ஒரே வினாத்தாள் தான் அதே நேரத்தில் நடைபெறும். இந்த தேர்வை நடத்துவது குறித்து பல வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுகள் துறையும் பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் ஒவ்வொரு தேர்வு நடைபெறும் அன்று காலை 8 மணி அளவில் பள்ளிகள் வினாத்தாள் சேகரிப்பு மையத்தில் வந்து வினாத்தாள்களை பெற்று செல்லவும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் விதிக்கப்படும் செயல்முறைகள். ஏற்கனவே பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் மற்றும் வணிகவியல் போன்ற பாடங்களுக்கு வினாத்தாள்கள் தேர்விற்கு முந்தைய தினமே சமூக வலைதளங்களில் கசிந்தது குறிப்பிடத்தக்கது. இதே போன்று தற்போது நாளை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருக்கும் சமூக அறிவியல் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாளும் 17ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆங்கில வினாத்தாள் கசிந்துள்ளது.
அதேபோன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடக்கவிருக்கும் உயிரியல் பாடத்திற்கான வினாத்தாளும் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.
இந்த வினாத்தாள்கள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து கசிந்துள்ளது. இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக நேற்றைய தினமே தகவல்கள் வெளியானது.
அதுதொடர்பாக குழுவும் அமைக்கப்பட்டு இந்த வினாத்தாள்களை வெளியிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வினாத்தாள்களை வெளியிட்ட சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள நபர்களின் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும், தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்ட செயல்முறைகளை பின்பற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் திரு நந்தகுமார் செய்திக் குறிப்பு ஒன்றை இன்று வெளியிட்டு இருந்தார்,அதில் அவர் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியாகியிருந்தாலும் ஏற்கனவே திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது நாளை மற்றும் இரண்டு நாட்களுக்கு பிறகும் நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து உள்ளதால் தேர்வு நடைபெறுமா ? அல்லது வினாத்தாள் மாற்றப்படுமா ? என்ற சந்தேகம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
0 Comments